Thursday 23 June 2011

சத்தியப் பாதையில் அழைப்புப் பணி

இறைவன் தன்னுடைய அளவில்லா கருணையினால் இஸ்லாம் என்ற அற்புதத்தை ஏற்கும் பாக்கியத்தை நமக்கு வழங்கியுள்ளான். கோடிக்கணக்கான மக்களில் நம்மை தேர்வு செய்து இந்த பாக்கியத்தை வழங்கியுள்ளான். பெரும் பெரும் செல்வந்தர்களுக்கும் நாட்டையே ஆளும் வலிமைபடைத்தவர்களுக்கும் கிடைக்காத தனிச்சிறப்பை இஸ்லாத்தை ஏற்றதின் மூலம் நாம் பெற்றிருக்கிறோம்.
நபியாக இருந்த இப்ராஹிம் (அலை) அவர்களின் தந்தைக்குக் கூட இந்தச் சிறப்பு கிடைக்கவில்லை. நபி நூஹ் (அலை) அவர்களின் மகனுக்கும் மனைவிக்கும் இன்னும் நபி லூத் (அலை) அவர்களின் மனைவிக்கும் இந்தச் சிறப்பு கிடைக்கவில்லை. நபிமார்களின் உறவினர்களுக்கு கிடைக்காத இவ்வளவு பெரிய பேற்றை நாம் பெற்றதற்காக இறைவனுக்கு நாம் கட்டாயமாக நன்றி செலுத்த வேண்டும். இஸ்லாம் காட்டும் இந்த நேர்வழியை ஏற்றுக்கொள்வது மாபெரும் அருட்கொடை என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகிறான்
.
அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்! பிரிந்து விடாதீர்கள்! நீங்கள் பகைவர்களாக இருந்த நிலையில் அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப் பாருங்கள்! அவன் உங்கள் உள்ளங்களுக் கிடையே இணைப்பை ஏற்படுத்தினான். எனவே அவனது அருளால் சகோதரர்களாகி விட்டீர்கள்! நரகத்தின் விளிம்பில் இருந்தீர்கள். அதிலிருந்து உங்களைக் காப்பாற்றினான். நீங்கள் நேர் வழி பெறுவதற்காக இவ்வாறே அல்லாஹ் தனது சான்றுகளைத் தெளிவு படுத்துகிறான்.
அல்குர்ஆன் (3 : 103)
இஸ்லாத்தைத் தழுவுவதற்கு முன்பு நபித்தோழர்கள் இஸ்லாத்தை அறிந்துகொள்ளாத காரணத்தினால் ஒருவரையொருவர் பகைத்துக் கொண்டு எதிரிகளாக வாழ்ந்தார்கள். சரியான வழியறியாமல் தவறான வழியில் அவர்கள் திழைத்திருந்ததால் அதை அல்லாஹ் நரகத்தின் விழிம்பு என்று சுட்டிக்காட்டுகிறான். பின்பு இவர்களை இஸ்லாத்திற்குள் நுழையச் செய்து பாசமிகுந்த கொள்கைச் சகோதரர்களாக ஆக்கினான். இந்த பாக்கியத்தை மறந்து விடாமல் எப்பொழுதும் மனதில் எண்ணிப்பார்க்க வேண்டும் என அவர்களுக்கு அல்லாஹ் பணிக்கிறான்.
இறைவன் இவ்வாறு எண்ணிப்பார்க்கச் சொல்வதற்கு முக்கிய காரணம் ஒன்று உள்ளது. பொதுவாக மனிதர்கள் தான் பெற்ற இன்பத்தை இந்த வையகமும் பெற வேண்டும் என்று நினைப்பார்கள். ஒரு அற்புதமான அருவியை பார்த்துவிட்டால் உடனே தன்னுடைய உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு நாம் சென்றுவிடுகிறோம். இதைப் போல் இஸ்லாத்தின் அருமை பெருமைகளை நாம் விளங்கிக் கொண்டால் கண்டிப்பாக நம்மால் இதை பிறருக்கு எடுத்துச் சொல்லாமல் இருக்கவே முடியாது. எப்படியாவது இஸ்லாத்தை ஏற்காத நம்முடைய நண்பர்கள் அக்கம்பக்கத்து வீட்டார்கள் ஆகியோருக்கு இதை எடுத்துச் சொல்லி அவர்கள் இம்மார்க்கத்தில் நுழைய வேண்டும் என்று பேராவல்படுவோம்.
 இறைவன் அளித்த இந்த பாக்கியத்தை நினைவுகூறுவது நாம் இஸ்லாத்தைப் பரப்புவதற்கு தூண்டுகோலாக இருக்கும் என்பதால் இறைவன் இதை எண்ணிப்பார்க்கச் சொல்கிறான். இதையறியாத நம்மில் பலர் கழுதைக்குத் தெரியுமா கற்பூரவாசனை என்ற பழமொழிக்கிணங்க செல்வம் தான் பெரும் பாக்கியம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். வெண்ணையை வைத்துக் கொண்டு வேப்ப இழையை உண்பது போல இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தவறான வழியில் செல்கிறார்கள். ஆகையால் இவர்களைப் போல் பெயரளவில் இஸ்லாத்தில் இருப்பவர்களுக்கும் இஸ்லாத்தை தழுவாத மாற்றுமத அன்பர்களுக்கும் இஸ்லாத்தை எடுத்துச் சொல்வது நம்மீது கட்டாயக் கடமை.
அழைப்புப் பணியின் சிறப்பு
கடைசி நபியான முஹம்மத் (ஸல்) அவர்களுக்குப் பின்பு இனி யாரும் நபியாக வரமாட்டார்கள். நபிகள் நாயம் இறந்துவிட்டாலும் அவர்கள் கொண்டுவந்த குர்ஆனும் ஹதீஸþம் இன்றும் உயிருடன் இருக்கிறது. ஏன் உலகம் அழியும் நாள் வரைக்கும் நிலைத்து நிற்கும். ஒரு பேச்சுக்கு இப்போது நபி (ஸல்) அவர்கள் உலகத்திற்கு வருவார்களானால் புதிதாக எதையும் அவர்கள் கூறமாட்டார்கள். ஏற்கனவே கூறிய செய்திகளையே திரும்பவும் கூறுவார்கள். ஏùன்றால் மார்க்கத்தை அல்லாஹ் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே பூரணப்படுத்திவிட்டான். ஒன்று கூட மீதம் வைக்கவில்லை.
நபி (ஸல்) அவர்கள் எதை மக்கள் மத்தியில் போதனை செய்தார்களோ அதை அப்படியே இறைவன் பாதுகாத்து நமது கையில் குர்ஆன் ஹதீஸாகத் தந்துள்ளான். இஸ்லாத்தைப் பரப்புவதை விட அழகிய பணி உலகில் வேறு எதுவும் இல்லை. நாமும் இஸ்லாத்தின் படி நடந்து பிறரையும் இஸ்லாத்தின் பால் அழைத்து மகிழ்ச்சியுடன் நான் முஸ்லிம் என்று கூறுவதை விட இறைவனிடத்தில் சிறந்த வார்த்தை எதுவும் இல்லை.
அல்லாஹ்வை நோக்கி அழைத்து நல்லறம் செய்து நான் முஸ்லிம் என்று கூறியவனை விட அழகிய சொல்லைக் கூறுபவன் யார்
அல்குர்ஆனன் (41 : 33)
பெருமானார் (ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு முன்னால் மக்கள் திரண்டிருந்த நேரத்தில் நான் உங்களுக்கு இம்மார்க்கத்தை எத்திவைத்துவிட்டேன். சிறிய செய்தியாக இருந்தாலும் அதை என்னிடமிருந்து மக்களுக்கு நீங்கள் எத்திவைத்துவிடுங்கள் என்று கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்னிடமிருந்து ஒரேயொரு செய்தி கிடைத்தாலும் சரி அதை (ப் பிறருக்கு) எடுத்துரையுங்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல் : புகாரி (3461)
அன்றைய அரபுகளிடம் ஒட்டகங்கள் மாபெரும் சொத்தாகத் திகழ்ந்தது. இன்றைக்கு நாம் நிலங்களை சொத்துக்களாக வைத்திருப்பது போல் அவர்கள் ஒட்டகங்களை பெருஞ் செல்வங்களாக கணக்கிட்டார்கள். ஒட்டகங்களில் உயர்ந்த ரக ஒட்டகமான செந்நிற ஒட்டகத்தை மதிப்பிட்டிருந்தார்கள். ஒருவர் செந்நிற ஒட்டகத்தை வைத்திருந்தால் அது அவருக்குப் பெருமையாக இருக்கம். இதை வைத்துக்கொண்டு ஒருவருக்கொருவர் பெருமையடித்துக் கொண்டிருந்தார்கள்.
இந்த ஒட்டகத்திற்கு மேல் அவர்கள் வேறெதையும் விரும்பவில்லை என்று சொல்லும் அளவிற்கு அதில் அதிக ஆசைவைத்திருந்தார்கள். எனவே நபி (ஸல்) அவர்கள் செந்நிற ஒட்டகத்தை சுட்டிக்காட்டி நம் மூலம் ஒருவர் நேர்வழி பெறுவது இதை விடச் சிறந்தது என்று அலீ (ரலி) அவர்களிடம் கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் உம்மின் மூலம் ஒரேயொருவருக்கு அல்லாஹ் நேர்வழியளிப்பது சிவப்பு ஒட்டகைகளை விட உங்களுக்குச் சிறந்ததாகும்.
அறிவிப்பவர் : சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள்
நூல் : புகாரி (4210)
நாம் முனைப்புடன் இப்பணியில் செயல்பட வேண்டும் என்பதற்காக இறைவன் ஏராளமான நன்மைகளை இப்பணிக்காக வாரிவழங்குகிறான். ஒரு விதையை விளைச்சலுக்காக நாம் தரையில் போடுகிறோம். ஆனால் அதிலிருந்து 1000 கணக்கான விதைகள் வருகின்றன. இதைப் போல் ஒருவரை நாம் இஸ்லாத்திற்கு அழைத்து வந்துவிட்டால் அவர் செய்யும் நல்லகாரியங்கள் அனைத்திற்கும் கிடைக்கும் நன்மையைப் போன்றே நமக்கும் கிடைக்கிறது. சில வேலை நம்மை விட நம்மால் இஸ்லாத்திற்கு அழைத்துவரப்பட்டவர் அதிகமான நன்மைகளை செய்யலாம். இப்போது நாம் சுயமாக செய்யும் நன்மைகளைக் காட்டிலும் அவர் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மை அதிகம். நன்மையை அதிம் சேகரிக்க விரும்புபவர்கள் நிச்சயமாக இந்த வழியை கடைபிடிக்காமல் இருக்கமாட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் யார் (மக்களை) நேரான வழியின் பால் அழைக்கிறாரோ அவருக்கு அதை பின்பற்றுபவரின் கூலிகளைப் போன்ற கூலி கிடைக்கும். இவ்வாறு கொடுப்பது அதை செய்தவர்களின் கூலியிலிருந்து கொஞ்சம் கூட குறைத்துவிடாது.
அறிவிப்பவர் : அபூஹýரைரா (ரலி) அவர்கள்
நூல் : முஸ்லிம் (4831)
கவலைப்பட வேண்டும்
இந்த அருமை மார்க்கத்திற்கு மாற்றமாக மக்கள் நடப்பதை நாம் பார்த்தால் இஸ்லாம் இவர்களை சென்று அடையவில்லையே என்று நாம் கவலைப்பட வேண்டும். ஒருவர் நெருப்பில் விழப்போகும் போது எவ்வாறு நாம் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோமோ அதைப் போல் தவறான வழியில் மக்கள் செல்வதைப் பார்க்கும் போது கண்டிப்பாக ஒரு முஸ்லிமால் பார்த்துக் கொண்டிருக்க இயலாது. அவனையறியாமல் அவனுடைய உள்ளத்தில் கவலை எழ வேண்டும். நம்மைச் சுற்றி எத்தனையோ மாற்றுமத சகோதரர்கள் இருக்கிறார்கள். என்றைக்காவது நாம் மறுமையில் அவர்களுடைய நிலை குறித்து யோசித்துப் பார்த்திருப்போமா?
அவர்களுடைய நிலையைக் கண்டு கவலைப்பட வேண்டிய நாம் அவர்கள் மூடநம்பிக்கைக் காரியங்களில் ஈடுபடுவதைக் கண்டால் நாம் சிரிக்கின்றோம். கேலி செய்கின்றோம். என்னவோ இஸ்லாம் என்பது நமக்கு மட்டும் உரியது போல் நினைத்துக் கொண்டிருக்கிறோம். நபி (ஸல்) அவர்கள் நம்மைப் போன்றில்லாமல் தன்னைச் சுற்றி வாழும் இஸ்லாத்தைத் தழுவாத மக்களின் நிலையைக் கண்டு கவலைப்பட்டார்கள். இதன் விளைவால் அரபு தேசமே இஸ்லாத்தைத் தழுவியது.
பொதுவாக ஒருவர் எந்த ஒரு துறையில் வெற்றி பெற நினைத்தாலும் அவருக்கு அதுசம்பந்தமாக கவலைகள் இருக்க வேண்டும். படிக்கும் மாணவனுக்கு பரிட்சையில் வெற்றி பெறவேண்டும் என்ற கவலை இருந்தால் தான் அவர் படித்து வெற்றிபெறுவார். இந்தக் கவலை நபி (ஸல்) அவர்களிடம் அதிகம் அதிகமாகக் காணப்பட்டது. பின்வரும் சம்பவம் இதைத் தௌவாக எடுத்துரைக்கிறது.
ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை மாற்றுமதத்தார்களிடம் எடுத்துச் சொல்வதற்காக தாயிஃப் நகரத்திற்குச் சென்றார்கள். ஆனால் அவ்வூர் தலைவர் நபி (ஸல்) அவர்களிடம் முறையாகப் பேசவில்லை. நபி (ஸல்) அவர்களுடைய விருப்பத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை. நபியவர்களுக்கு கடும் துன்பங்களைக் கொடுத்தார்கள். மக்களுக்கு ஏகத்துவக் கொள்கையை சொல்ல முடியாமல் போனதை எண்ணி நபி (ஸல்) அவர்கள் மிகவும் கவலைப்பட்டவர்களாக திரும்பி வந்தார்கள்.
மக்களால் நபி (ஸல்) அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததால் சுய உணர்வையே இழந்துவிட்டார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களை இடையில் சந்தித்து நீங்கள் அனுமதி கொடுத்தால் இரண்டு மலைகளுக்கிடையில் இருக்கும் இந்த ஊரின் மேல் மலைகளைப் புரட்டிப்போட்டு அழித்துவிடுகிறேன் என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இவர்களை அழிக்க வேண்டாம். இவர்களுடைய சந்ததிகள் ஏகத்துவக் கொள்கைவாதிகளாக வருவார்கள் என்று நான் நினைக்கிறேன் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) அவர்கள்
நூல் : புகாரி (3231)
ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட கேள்விக்கு நபி (ஸல்) அவர்கள் அழித்த பதிலை நாம் யோசிக்க வேண்டும். எவ்வளவு தூரநோக்கோடு அழைப்புப் பணியை நபி (ஸல்) அவர்கள் ஆற்றியுள்ளார்கள்! தன்னுடையக் கருத்தை இந்த மக்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் இவர்களுடைய பிள்ளைகள் இஸ்லாத்தை ஏற்பார்கள் என்று கருதி தனக்குத் துன்பம் தந்தவர்களை அழிக்க வேண்டாம் என்று கூறினார்கள். அவர்களை அழித்து விட்டால் அவர்களுடைய பிள்ளைகளுக்கு இந்த இஸ்லாம் சென்றடையாது என்று பெருமானார் கவலைப்படுகிறார்கள். இது போன்ற கவலை நம்மிடம் வந்து விட்டால் மின்னல் வேகத்தில் இஸ்லாம் பரவத் தொடங்கிவிடும்.
அழகிய முறையில் நட்புக்கொள்ளுதல்
முந்தைய காலங்களில் நம்மில் பலர் மாற்றுமதத்தார்களை வேறுபடுத்தி அவர்களிடம் சரிவர பழகாமல் அந்நியர்களாகவே கருதிவந்தனர். ஆனால் இந்த ஏகத்துவ எழுச்சி தமிழகத்தில் பரவத் தொடங்கியது முதல் மாற்றாருக்கும் நமக்கும் மத்தியில் பலமான உறவு ஏற்பட்டிருக்கிறது. இஸ்லாத்தைத் தழுவாத மக்களிடையே அழகிய முறையில் பழக வேண்டாம் என்று மார்க்கம் சொல்லவே இல்லை. மாறாக நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய காலத்தில் வாழ்ந்த இஸ்லாத்தைத் தழுவாத மக்களிடம் அன்பாகவும் கொடுக்கல் வாங்கல் வைத்துக்கொண்டும் இருந்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் ஒரு யூதரிடம் குறிப்பிட்டத் தவணையில் திருப்பித் தருவதாக உணவுப்பொருளை வாங்கினார்கள். (அதற்காக) அவரிடம் தமது இரும்புக் கவசத்தை அடைமானமாக வைத்தார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) அவர்கள்
நூல் : புகாரி (2068)
நபி (ஸல்) அவர்களுக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்த ஒரு யூதச் சிறுவன் திடீரென நோயுற்றான். எனவே அவனை நோய்விசாரிக்க நபி (ஸல்) அவர்கள் அவனிடம் வந்து அவனது தலைமாட்டில் அமர்ந்துகொண்டு இஸ்லாத்தை ஏற்றுக்கொள் என்றார்கள். உடனே அவன் தன்னருகிலிருந்த தந்தையைப் பார்த்தான். அப்போது அவர் அபுல் காசிம் நபி (ஸல்) அவர்களின் கூற்றுக்குக் கட்டுப்படு என்றதும் அவன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டான். உடனே நபி (ஸல்) அவர்கள் இவனை நரகத்திலிருந்து பாதுகாத்த அல்லாஹ்விற்கே சகல புகழும் எனக் கூறியவாறு அங்கிருந்து வெளியேறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி) அவர்கள்
நூல் : புகாரி (1356)
நபி (ஸல்) அவர்கள் யூதர்களிடத்தில் கொடுக்கல் வாங்கல் வைத்துக் கொண்டிருந்தார்கள் என்பதற்கு மேற்கண்ட ஹதீஸ் சிறந்த ஆதாரமாக உள்ளது. நபியவருக்கு பணிவிடை செய்யும் அளவிற்கு யூதர்கள் நபி (ஸல்) அவர்களிடம் நெருக்கமாகப் பழகியுள்ளார்கள். இந்த நெருக்கத்தினால் தான் யூதச் சிறுவன் நோய்வாய்ப்படும் போது அவனை நலம் விசாரிக்கச் செல்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் சிறுவனைப் பார்த்து இஸ்லாத்தை ஏற்றுக்கொள் என்று கூறிய மாத்திரத்தில் அவனுடைய தந்தை ஏற்றுக்கொள்வதற்கு அனுமதியளிக்கிறார் என்றால் பெருமானார் மீது அவர் எவ்வளவு மரியாதை வைத்திருப்பார்கள்! நபியவர்கள் அவரிடத்தில் அழகிய முறையில் நடந்துகொண்டதே இதற்குக் காரணம். எனவே மாற்றுமத சகோதரர்களிடம் அழகிய முறையில் நாம் பழகுவது அவர்கள் இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்படுவதற்கு முக்கிய காரணமாகும்.
இன்னும் மாற்றுமதத்தார்கள் கஷ்டப்படும் போது அவர்களுக்க உதவி செய்வதும் இஸ்லாத்தின் பால் அவர்கள் ஈர்க்கப்படுவதற்கு முக்கியக் காரணமாகும். இதனால் தான் ஜகாத்தை மாற்றார்களுக்கு தருவதற்கு இஸ்லாம் அனுமதியளிக்கிறது. ஏனென்றால் அவர்களுக்கு ஜகாத் போன்ற உதவி கிடைக்கும் போது இஸ்லாத்தின் மீது ஒருவிதமான நல்லெண்ணம் ஏற்பட்டு இஸ்லாம் மனிதநேயமிக்க மார்க்கம் என்பதை அறிந்து கவரப்படுவார்கள்.
யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும், அடிமை(களை விடுதலை செய்வதற்)கும், கடன்பட்டோருக்கும், அல்லாஹ்வின் பாதையிலும், நாடோடிகளுக்கும் தர்மங்கள் உரியனவாகும். இது அல்லாஹ்வின் கடமை. அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.
அல்குர்ஆன் (9 : 60)
சண்டையிடவந்தவர்களிடத்தில் சன்மார்க்கத்தை பரப்புதல்
நம் சமுதாயத்தில் சில இளைஞர்கள் இஸ்லாமிய ஆட்சியை நிலைநாட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் தவறான வழியில் சென்றுகொண்டிருக்கிறார்கள். நபிமார்கள் யாரும் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் வரவில்லை. எல்லோரும் இந்த ஏகத்துவக் கொள்கையை மக்களுக்கு விளக்குவதற்காகத் தான் அனுப்பப்பட்டார்கள். மக்கள் மனதில் ஏகத்துவத்தின் ஒளி சுடர் விடத் தொடங்கிய உடன் நபிமார்களின் கையில் தானாக ஆட்சி கிடைத்தது.
ஜிஹாத் என்பது அநீதி நடக்கும் போது அதை தட்டிக்கேட்பதற்காக ஒரு அரசாங்கம் ஆயுதம் தாங்கி போரிடுவது மட்டுமல்ல. மாற்றுமத மக்களிடயே இஸ்லாத்தை எடுத்துச் சொல்லி அவர்களுடைய மனங்களில் இந்தத் தூய மார்க்கத்தை நிலைபெறச் செய்வதும் ஜிஹாத் தான். இறைவன் குர்ஆனை வைத்து ஜிஹாத் செய்யச் சொல்கிறான். குர்ஆனை வைத்து ஜிஹாத் செய்வதென்றால் குர்ஆனுடைய கருத்துக்களை மக்களிடையே அழகிய முறையில் எடு.த்துக் கூறி உண்மையை நிலைநாட்டப் பாடுபடுவதாகும்
எனவே (ஏக இறைவனை) மறுப்போருக்கு நீர் கட்டுப்படாதீர்! இதன் மூலம் (குர்ஆன் மூலம்) அவர்களுடன் கடுமையாகப் போரிடுவீராக!
 அல்குர்ஆன் (25 : 52)
          அன்றைக்கு இஸ்லாத்தை அழிப்பதற்காக இணைவைப்பாளர்கள் இஸ்லாத்தின் பெயரால் பலவிதமான அவதூருகளை பரப்பிக்கொண்டிருந்தார்கள். முஸ்லிம்களை அழிக்க வேண்டும் என்று பேராசைப்பட்டார்கள். இப்படிப்பட்ட கொடிய உள்ளம் படைத்தவர்களிடத்திலும் குர்ஆனை எடுத்துச் சொல்ல வேண்டும் என்று இறைவன் இந்த வசனத்தில் குறிப்பிடுகின்றான். நபி (ஸல்) அவர்களும் மார்க்கத்தை எடுத்துச் சொல்லி போராடும் படி வலியுறுத்தியிருக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் இணைவைப்பாளர்களிடத்தில் உங்களுடைய பொருட்களாலும் கைகளாலும் நாவுகளாலும் போரிடுங்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி) அவர்கள்
நூல் : நஸயீ (3045)
நாவுகளால் போரிட வேண்டும் என்றால் இணைவைப்பாளர்களிடத்தில் உள்ள அசத்தியக் கருத்துக்களை எடுத்துக் கூறி அவர்களை சத்தியத்தின் பால் கொண்டு வருவதாகும். நபி (ஸல்) அவர்கள் எந்த ஒரு போருக்குச் சென்றாலும் முதலில் அவர்களுக்கு இஸ்லாத்தைப் பற்றி எடுத்துச் சொல்வார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்தக் கூட்டத்தார்களிடத்தில் போரிட்டாலும் அவர்களை (இஸ்லாத்தின் பால்) அழைக்காமல் இருந்ததில்லை.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்
நூல் : அஹ்மத் (2001)
 கைபர் போர்களத்தில் முஸ்லிம்களுக்கு எதிரிகளாக யூதர்கள் களம் இறங்கினார்கள். அவர்களிடத்தில் போரிடுவதற்காக நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களை தலைவராக நியமிக்கிறார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் எதிரிகள் நம்மைப் போன்று இஸ்லாமியர்களாக ஆகும் வரை நான் அவர்களிடம் போர் செய்யட்டுமா? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறிய பதில் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.
நிதானத்தைக் கடைபிடிப்பீராக. அவர்களுடைய களத்திற்கு நீர் சென்றவுடன் அவர்களை இஸ்லாத்தின் பால் அழைத்து அவர்கள் மீது கடமையாகுபவற்றை அவர்களுக்குத் தெரிவிப்பீராக. அல்லாஹ்வின் மீதாணையாக உங்கள் வாயிலாக ஒரேயொரு மனிதருக்கு நேர்வழியளிக்கப்படுவது சிகப்பு ஒட்டகங்களை விட உங்களுக்குச் சிறந்ததாகும் என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள்
நூல் : புகாரி (2942)
அலீ (ரலி) அவர்கள் நான் முதலில் சண்டையிடட்டுமா? என்று கேட்கும் போது அவசரப்படாதே. முதலில் அவர்களுக்கு இஸ்லாத்தை எடுத்துச் சொல் என்று கூறுகிறார்கள். இங்கு தான் நாம் ஒரு முக்கியமான ஒரு விஷயத்தை நினைவுக்குக் கொண்டுவர வேண்டும். இன்றைக்கு நம்மைச் சுற்றி பெரும்பாலும் கள்ளம் கபடமில்லாமல் அண்ணன் தம்பிகளைப் போன்று பழகிக்கொண்டிருக்கும் மாற்றுமத சகோதரர்கள் அதிகமான வாழ்கிறார்கள். கொடியவர்களுக்கு இஸ்லாத்தைச் சொல்வது நம்மீது கடமையென்றால் இந்த அப்பாவி மக்களுக்கு இஸ்லாத்தை எடுத்துச் சொல்வது நம்மீது கடமையில்லையா?
எதிர்ப்புகளுக்கு மத்தியில் தன்னந்தனியாக
எந்தெந்த வழிகளில் இஸ்லாத்தை மக்களிடத்தில் பரப்ப முடியுமோ அந்த வழிகள் அனைத்திலும் நபி (ஸல்) அவர்கள் புகுந்து இஸ்லாத்தை எடுத்துரைத்தார்கள். பணவலிமையையோ அல்லது படைவலிமையையோ எதிர்பார்க்காமல் ஏக இறைவனின் மீது நம்பிக்கை வைத்து இந்த களப்பணியில் குதித்தார்கள். பழிப்பவர்களின் பழிச்சொல்லுக்கு அவர்கள் அஞ்சவில்லை. அனைத்து இடர்களையும் சகித்துக்கொண்டு எதிர் நீச்சலடித்தார்கள்.
ஆரம்பகாலக்கட்டத்தில் பெருமானாரை அதிகமான மக்கள் மறுத்தார்கள். விரல்விட்டு எண்ணும் விதத்தில் சில நபர்கள் மாத்திரம் பெருமானாரை தூதராக ஏற்றிருந்தார்கள். இந்த இக்கட்டான சூழ்நிலையில் நபி (ஸல்) அவர்கள் எதற்கும் அஞ்சாமல் தன்னந்தனியாக ஏகத்துவக் கொள்கையை மக்களிடத்தில் பிரகடனம் செய்தார்கள். தாயிஃப் நகரத்திற்க தனிமையில் சென்றபோது அங்கு மக்கள் அவர்களுக்கு அளித்த கஷ்டங்களை அனுபவித்துவிட்டு கவலையோடு திரும்பினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) அவர்கள்
நூல் : புகாரி (3231)
உஹது போரில் எதிரிகளால் நபி (ஸல்) அவர்களுடைய மண்டை உடைக்கப்பட்டு நடுப்பல் பிடுங்கப்பட்டது. இரத்தம் நிக்காமல் ஓடிக்கொண்டிருந்தது. அவ்வளவு பெரிய கஷ்டத்தை பெருமானார் உஹது போரில் அனுபவித்தார்கள். இந்த உஹதுப் போரில் அவர்கள் பட்ட கஷ்டத்தை விட மிகக் கடுமையான சிரமத்தை தாயிஃப் நகரத்திற்குச் செல்லும் போது அனுபவித்ததாக நபியவர்களே குறிப்பிடுகிறார்கள். இஸ்லாத்தைப் பரப்புவதற்காக எவ்வளவு பெரிய இன்னல்களை பெருமானார் (ஸல்) அவர்கள் சுமந்தார்கள் என்பதை உணர்ந்து நாம் நம்முடைய உயிரை துட்ஷமாக மதித்து இஸ்லாத்தைப் பரப்புவதில் முனைப்புடன் செயல்பட வேண்டும்.
இன்றைக்கு நாம் சுகமாக மேடைகளை அமைத்து இஸ்லாத்தைப் பரப்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால் நபியவர்கள் மக்கள் நடமாடுகின்ற கடைத்தெருவில் மக்களோடு மக்களாக நடந்துகொண்டு இஸ்லாத்தை எடுத்துச் சொன்னார்கள். பெருமானார் (ஸல்) அவர்கள் பிரச்சாரத்திற்காக செல்லும் இடமெல்லாம் பிரச்சாரத்திற்கு ஊறுவிளைவிப்பதற்காக அபூலஹப் நபியவர்களுக்குப் பின்னாலே சென்றுகொண்டிருந்தார். பின்வரும் இச்சம்பவம் பல கஷ்டங்கள் வந்தாலும் தன்னந்தனியாக பிரச்சாரம் செய்ய வேண்டிய நிர்பந்தம் வந்தாலும் துவண்டுவிடாமல் அழைப்புப் பணியை தொடர வேண்டும் என்று தெளிவாக எடுத்துரைக்கிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் துல்மஜாஸ் என்னும் இடத்தில் மக்களை இஸ்லாத்தின் பால் அழைத்துக் கொண்டிருப்பதை நான் பார்த்தேன். (அப்போது) அவர்களுக்குப் பின்னால் மாறுகண் கொண்ட ஒருவர் இவர் உங்கள் மார்க்கத்தை விட்டும் உங்களது முன்னோர்களின் மார்க்கத்தை விட்டும் உங்களை (மாற்றி) வென்றுவிட வேண்டாம் என்று கூறிக்கொண்டிருந்தார். அப்போது நான் சிறுவனாக இருந்தேன். என் தந்தையிடம் இவருக்குப் பின்னால் நடந்து வருபவர் யார்? என்று கேட்டேன். அதற்கு என் தந்தை இவர் முஹம்மதுடைய பெரிய தந்தை அபூலஹப் ஆவார் என்று கூறினார்.
அறிவிப்பவர் : ரபீஆ பின் அப்பாத் (ரலி) அவர்கள்
நூல் : அஹ்மத் (15447)
பெருமானாரின் பெரிய தந்தையான அபூதாலிப் அவர்கள் மரண வேலையில் இருந்தபோது அவர்களுக்கு இஸ்லாத்தை எடுத்துச் சொல்வதற்குத் தடையாக அபூஜஹல் இருந்தான். முடிவில் அபூதாலிப் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாமல் அப்துல் முத்தலிபின் மார்க்கத்தில் தான் இருப்பதாக கூறிவிட்டு மரணித்தார்.
அறிவிப்பவர் : முஸய்யப் (ரலி) அவர்கள்
நூல் : புகாரி (1360)
தன்னுடைய கூட்டத்தினரான குறைஷிகளுக்கு இஸ்லாத்தை நபி (ஸல்) அவர்கள் எடுத்துச் சொன்ன போது குறைஷிகள் ஏற்க மறுத்தது மட்டுமல்லாமல் பிரச்சாரம் செய்யவிடாமல் நபியவர்களைத் தடுத்தார்கள். தன்னுடைய பகுதியில் பிரச்சாரத்திற்கு தடைவிதிக்கப்பட்டுவிட்ட போது அவர்கள் துவண்டுவிடாமல் பிற கூட்டத்தார்களிடத்தில் சென்று இஸ்லாத்தை பரப்ப வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். அதற்காக தனக்கு உதவும் படி ஹஜ்ஜிற்கு வந்த மக்களிடம் வேண்டினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜþடைய காலத்தில் (மக்களிடத்தில்) தன்னை (நபி என்று) எடுத்துரைத்தார்கள். அப்போது அவர்கள் தன்னுடைய கூட்டத்தாரிடம் என்னை அழைத்துச் செல்பவர் யாரும் (உங்களில்) இல்லையா? குரைஷிகள் எனது இறைவனின் கூற்றை எடுத்துரைக்க விடாமல் என்னை தடுத்துவிட்டார்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) அவர்கள்
நூல் : திர்மிதி (2849)
செல்லும் இடமெல்லாம் அழைப்புப் பணி
ஓரிடத்தில் மக்கள் கூட்டம் காணப்படுமேயானால் நபி (ஸல்) அவர்கள் உடனே அங்க இஸ்லாத்தை எடுத்துச் சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள். சிறியவர் பெரியவர் என்று பார்க்காமல் கூச்சப்படாமல் யாவருக்கும் இஸ்லாத்தை எடுத்துச் சொன்னார்கள். ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் ஒரு நபித்தோழரை நலம் விசாரிப்பதற்காகச் சென்றுகொண்டிருந்தார்கள். வழியில் ஒரு சபையைக் கண்டார்கள். அதில் முஸ்லிம்களும் யஹþதிகளும் இணைவைப்பாளர்களும் கலந்திருந்தார்கள். வந்த நோக்கம் வேறாக இருந்தாலும் கூட்டத்தைப் பார்த்தவுடன் அவர்களுக்க இஸ்லாத்தை எத்திவைக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுவிட்டது.
ஆகையால் அவர்கள் அந்த சபையோர்களை நோக்கி தன் வாகனத்தைச் செலுத்தினார்கள். வாகனத்தை விட்டு இறங்கி அவர்களுக்கு சலாம் கூறி இஸ்லாத்தை எடுத்துரைத்தார்கள். குர்ஆனுடைய வசனங்களையும் அவர்களிடத்தில் ஓதிக்காட்டினார்கள். நயவஞ்சர்களின் தலைவனாகிய அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் நபிகளாரிடத்தில் இது போன்ற சபைகளில் உம்முடையக் கூற்றை சொல்லி எங்களை தொல்லைபடுத்தாதீர். இங்கிருந்து சென்று விடு. உம்மிடம் வருபவர்களிடம் மாத்திரம் இதை பரப்பிக்கொள் என்று கூறினாôன். அங்கிருந்த நபித்தோழர் ஒருவரும் ஆம் அல்லாஹ்வின் தூதரே நீங்கள் நம்முடை அவையில் இதை எடுத்துரைக்கலாம் என்று அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் கூறியதை நியாயப்படுத்தினார். இவர்கள் கூறிய இந்த பதிலைக் கேட்டு நபியவர்கள் கவலைப்பட்டார்கள்.
அறிவிப்பவர் : உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள்
நூல் : புகாரி (4566)
பெருமானார் (ஸல்) அவர்கள் தன்னை விட வயது குறைந்தவர்களிடத்திலும் இஸ்லாத்தை எடுத்துரைத்தார்கள். சிறுவர்கள் தானே என்று அலட்சியமாகக் கருதி அவர்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிடவில்லை. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்று சொல்வார்கள். சிறு வயதில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சொல்லித்தருகின்ற விஷயங்கள் பல வருடங்களுக்குப் பின்னாலும் மறக்காமல் இருப்பதை நாம் பார்க்கிறோம். பருவ வயதில் ஒரு கருத்தை மனதில் பதியவைத்து விட்டால் பசுமரத்தாணி போல் அது மனதில் பதிந்துவிடும். எனவே நபியவர்கள் இஸ்லாத்தை இவர்களுக்கும் எடுத்துச் சொன்னார்கள்.
இப்னு சய்யாத் என்பவன் சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அவன் பருவ வயதை எட்டியிருந்தான். நபியவர்கள் இப்னு சய்யாதை தனது கையால் தட்டிக்கொடுத்து விட்டு இஸ்லாத்தை எடுத்துச் சொன்னார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) அவர்கள்
நூல் : புகாரி (1355)
யமன் நாட்டிற்கு முஆத் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் ஆளுநராக நியமித்தார்கள். மக்களுடைய மனங்களில் இஸ்லாத்தை இடம்பெறச் செய்வது முக்கியம் என்பதால் நபி (ஸல்) அவர்கள் யமன் நாட்டிற்கு முஆத் (ரலி) அவர்களை அனுப்பும் போது அழைப்புப் பணியில் ஈடுபடுவதை மையப்படுத்திக் கூறினார்கள்.
 நபி (ஸல்) அவர்கள் முஆத்தை யமனுக்கு அனுப்பினார்கள். அப்போது அவரிடம் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. நான் அல்லாஹ்வின் தூதர் என்ற உறுதிமொழியின் பால் அவர்களை அழைப்பீராக. இதற்கு அவர்கள் கட்டுப்பட்டுவிட்டால் தினமும் ஐவேளைத் தொழுகையை அவர்களின் மீது அல்லாஹ் கடமையாக்கியுள்ளான் என்பதை அவர்களுக்கு அறிவிப்பீராக. இதற்கும் அவர்கள் கட்டுப்பட்டால் அவர்களில் செல்வந்தவர்களிடம் பெற்று ஏழைகளுக்கு வழங்குவதற்காக அவர்களின் செல்வத்தில் இறைவன் ஸகாத்தைக் கடமையாக்கியிருக்கிறான் என்பதை அறிவிப்பீராக என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்
நூல் : புகாரி (1395)
இஸ்லாத்தைப் பரப்பும் ஆயுதம் எழுதுகோல்
நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய நாவால் இஸ்லாத்தைப் பரப்பியதைப் போல் எழுத்தின் மூலமும் பரப்பினார்கள். தனக்கு எழுத தெரியாவிட்டாலும் எழுதத் தெரிந்தவர்களை வைத்து இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை கோட்பாடுகளை எழுதி அன்றைக்கு அவர்களை சுற்றி ஆட்சி செலுத்திக்கொண்டிருந்த பல மன்னர்களுக்கு அனுப்பினார்கள். இன்னும் பல கூட்டத்தார்களுக்கும் இவ்வாறு கடிதங்களை அனுப்பிக்கொண்டிருந்தார்கள். இன்றைக்கு பேணாவை வைத்து எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம். ஆயுதங்களால் முடியாத வேலைகளை பேணாவால் பலர் முடித்துக்காட்கிறார்கள். இதற்கு எடுத்துக்காட்டாக நபி (ஸல்) அவர்கள் எழுத்தின் மூலம் செய்த பிரச்சாரங்களைக் கூறலாம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து எங்களுக்கு கடிதம் வந்தது. அதை எங்களுக்குப் படித்துக் காட்டுவதற்கு ஒருவரும் இல்லை. கடைசியாக ளுபைஆ கோத்திரத்தைச் சார்ந்த ஒருவர் அதை படித்தார். (அதில்) பக்ர் பின் வாயிலிற்கு அல்லாஹ்வின் தூதர் எழுதிக்கொண்டது நீங்கள் இஸ்லாத்தை தழுவுங்கள். சாந்தியடைவீர்கள் என்று இருந்தது.
அறிவிப்பவர் : மிர்சத் பின் லப்யான் (ரலி)
நூல் : அஹ்மத் (19746)
நபி (ஸல்) அவர்கள் அரபியல்லாதவர்களான (ரோம் நாட்டைச் சேர்ந்த) ஒரு குழுவினருக்கு அல்லது மக்களில் சிலருக்கு கடிதம் எழுத விரும்பினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் அரபியரல்லாதோர் முத்திரையுள்ள கடிதத்தையே ஏற்றுக்கொள்வார்கள் என்று சொல்லப்பட்டது. உடனே நபி (ஸல்) அவர்கள் ஒரு வெள்ளி மோதிரத்தைச் செய்து அதில் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் (அல்லாஹ்வின் தூதர் முஹம்மத்) என்று இலச்சினைப் பொறித்தார்கள். இப்போதும் நான் நபி (ஸல்) அவர்களின் விரலில் அல்லது அவர்களின் கையில் அந்த மோதிரம் மின்னியதைப் பார்ப்பது போன்றுள்ளது.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள்
நூல் : புகாரி (5872)
புஸ்ராவின் ஆளுநர் மூலம் ஹெர்குலிஸ் மன்னரிடம் கொடுப்பதற்காக திஹ்யா வசம் நபி (ஸல்) அவர்கள் கொடுத்தனுப்பிய கடிதத்தைத் தம்மிடம் கொடுக்குமாறு மன்னர் ஆணையிட்டார். ஆளுநர் அதை மன்னரிடம் ஒப்படைத்தார். மன்னர் அதைப் படித்துப் பார்த்தார். அந்தக் கடிதத்தில் அளவற்ற அருளாளனும் கருணையாளனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் அல்லாஹ்வின் அடியாரும் அவனது தூதருமான முஹம்மது என்பார் ரோமபுரி சக்கரவர்த்தி ஹெர்குலிஸþக்கு எழுதுக் கொள்வது நேர்வழியைப் பின்பற்றுவோர் மீது சாந்தி நிலவட்டுமாக நிற்க இஸ்லாத்தைத் தழுவுமாறு உமக்கு நான் அழைப்புவிடுகிறேன். நீர் இஸ்லாத்தை ஏற்பீராக. நீர் ஈடேற்றம் பெற்றிடுவீர். அல்லாஹ் உமக்கு இருமடங்கு சன்மானம் வழங்குவான். (இவ்வழைப்பை) நீர் புறக்கணித்தால் (உமது) குடிமக்களின் பாவமும் உம்மைச் சாரும். வேதத்தை உடையவர்களே நாம் அல்லாஹ்வைத் தவிர (வேறு யாரையும்) வணங்கக்கூடாது. அல்லாஹ்வை விட்டுவிட்டு நம்மில் சிலர் சிலரை நமது இரட்சகராக ஆக்கிக்கொள்ளக்கூடாது என்ற எங்களுக்கும் உங்களுக்கும் பொதுவான கொள்கையை நோக்கி வந்துவிடுங்கள். (இக்கொள்கையை) நீங்கள் (ஏற்க மறுத்து) புறக்கணித்தால் நாங்கள் நிச்சயமாக (அந்த ஒரே இறைவனுக்கு கீழ்படிந்த) முஸ்லிம்கள் என்பதற்கு நீங்களே சாட்ச்சிகளாக ஆகிவிடுங்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்
நூல் : புகாரி (7)
அரசன் இஸ்லாத்தைத் தழுவிவிட்டால் அந்த அரசனுக்கு கீழ்வாழும் குடிமக்கள் சுலபமாக இஸ்லாத்தில் வந்துவிடுவார்கள் என்பதால் அரசனுக்கு இக்கடிதத்தை அனுப்புகிறார்கள். இதுமட்டுமின்றி பேச்சாளர்களை பல இடங்களுக்கு அனுப்பியும் இஸ்லாத்தை பரவச் செய்தார்கள். இவ்வாறு பலவழிகளில் அழைப்புப் பணியை செய்ய வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் சஹாபாக்களுக்குப் பயிற்றுவித்தார்கள். எனவே பெருமானார் (ஸல்) அவர்கள் இறந்த போதிலும் இந்தப் பணியை தன்னுடைய உயிர் மூச்சாக்கிக் கொண்டு எங்கோ வாழ்கின்ற நமக்கெல்லாம் இஸ்லாத்தைக் கொண்டுவந்து சேர்த்தார்கள். இன்று எத்தனையோ கிராமங்களுக்கும் நமக்கருகில் வாழும் மாற்றுமத சகோதரர்களுக்கம் இஸ்லாம் செல்லவில்லை. எனவே இந்தத் தூய இஸ்லாம் ஏறாத உள்ளங்களுக்கு நம்மின் மூலம் அல்லாஹ் நேர்வழிகாட்டுவானாக!

1 comment:

  1. Bet365 Casino & Promos 2021 - JTM Hub
    Full 출장안마 list of Bet365 Casino & Promos · Up to £100 ventureberg.com/ in worrione Bet Credits for new customers at bet365. Min deposit £5. Bet Credits available for use febcasino.com upon settlement gri-go.com of bets to value of

    ReplyDelete